சாதனை 1 - ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற தமிழ் மாணவி

மும்பையில் கடந்த ஆண்டு ஜுலை 26-ம் தேதி புயலுடன் கூடிய பலத்தமழை பெய்தது. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. தொடர்ந்து 15 நாட்கள் இடைவிடாது மழை பெய்தது. இதனால் மராட்டிய மாநில மித்தி நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மும்பை நகரமே தண்ணீரால் சூழப்பட்டது. இதனால் மும்பை நகர மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளானார்கள்.
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டன. வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படடது. ரெயில்வே போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். மொத்தத்தில் மும்பை நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புயல் மழையின் காரணமாக மித்தி நதி செல்லக்கூடிய பகுதிகள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மீண்டும் இதே போல் மழைபெய்தால் மித்தி நதியால் பொது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். ஆகவே மித்தி நதியை சீரமைத்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம். இதற்காக பல்வேறு நிலைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பிரிவாக மித்தி நதி சீர்திருத்த திட்டக்குழுவின் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஆலோசனைக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
இக்கட்டுரைப் போட்டியில் கிட்டத்தட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மித்தி நதியை சீரமைப்பு செய்வது பற்றி பல்வேறு விதங்களில் தங்கள் ஆலோசனையைக் கூறியுள்ளார்கள்.
போட்டியின் முடிவில் ஆறு மாணவ-மாணவிகளின் கட்டுரைகள் சிறந்ததாக தேர்வு பெற்றது. இந்த ஆறு மாணவ-மாணவிகளில் மேக்னா ராஜா என்ற மாணவியும் ஒருவர். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆம், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குனேரி தாலுகாவில் உள்ள நல்லான் குளம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை ராஜா இளங்கோ மும்பையில் தொழில் செய்து வருகிறார்.

மும்பை விமான நிலையத்துக்கு வந்த அப்துல்கலாம் மாணவ-மாணவிகளின் கட்டுரை போட்டியைப் பற்றி கேள்விப்பட்டு அவர்கள் எழுதிய கட்டுரைகளையும் படித்து பார்த்தார். ஒவ்வொரு கட்டுரையின் சிறப்புகளையும் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினார்கள், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள்.
அவர்களுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் விமான நிலையத்தில் வைத்து பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது மராட்டிய மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் உடன் இருந்தார். மித்தி நதி சீரமைப்பு திட்டத்திற்கு மாணவர்கள் கூறிய திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்துமாறும் மராட்டிய முதல்வர் விலாஸ் ராவ் தேஷ் முக்கிடம் ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதி கையால் பரிசு பெற்ற தமிழக மாணவி மேக்னா ராஜா கூறும்போது, "எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஜனாதிபதி கையால் பரிசு வாங்கியதை வாழ்நாளில் மறக்க மாட்டேன். வருங்காலங்களில் நிறைய கட்டுரைகள் எழுதுவேன். அது நாட்டிற்கு பலன் உள்ளதாக இருக்கும். என்னுடன் சேர்ந்து பரிசு வாங்கிய மற்ற மாணவ-மாணவிகளையும் பாராட்டுகிறேன்,'' என்றார்.
நன்றி: தினத்தந்தி
0 Comments:
Post a Comment
<< Home