நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!

சாதனையாளர்கள்

அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர்களையும், நம் நாட்டில் இளம் சாதனையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்படும். உங்க குழந்தையையும் சாதனை குழந்தையாக சாதிக்க உதவுங்கள்.

Thursday, April 20, 2006

சாதனை 2 - கைகளில் கலைவண்ணம்


கல்லிலே கலை வண்ணம் கண்டான்! என்றான் கவிஞன் ஒருவன். இந்த பாடல் வரிக்கு ஏற்ப கல்லில் மட்டும் இல்லாமல் கீழே போடும் மரக் கட்டைகள், கரையான் அரித்த மரப்பகுதிகளை வைத்து அழகாக சிற்பம் வடித்துள்ளார் ஹரீஸ்.

அவர் வடிவமைத்த சிற்பங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் அவரை பற்றி அறிவோம்.

22 வயது இளைஞர் ஹரீஸ். சென்னை வட பழநி, கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் இவர் சென்னை திறந்தவெளி பல்கலை கழகத்தில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தந்தை நடராஜன் கார்பென்டராக பணிபுரிகிறார். சிறு வயதில் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு வீட்டில் சும்மா இருக்கிற நேரங்களில் தனது தந்தைக்கு உதவியாக கார்பென்டர் பணிகளுக்கு செல்வார்.

இதனால் நுணுக்கமான பணிகளைப் பற்றி ஓரளவுக்கு அறிந்து கொண்டார். மேலும் இந்தப் பணியில் இவருக்கு ஆர்வம் அதிகரிக்கவே, கடினமானப் பணிகளையும் செய்து பார்த்தார்.

இதில் முதலில் தடுமாறினாலும் தொடர்ந்து முயற்சி செய்ததால் கடினமானப் பணிகளைக் கூட எளிதாக செய்ய முடிந்ததாம். நுணுக்கமான சிற்பங்கள் வடிவமைப்பில் பல சிறபங்களை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்ததாம். அப்போது அவரது நினைவில் தோன்றியது தான் அனைவரும் கழித்துவிட்டு போடும் பொருட்களை கொண்டு மிகச் சிறிய அளவிலான சிற்பங்களை வடிவமைத்தால் என்ன என்று. அதற்கு செயல்வடிவமும் கொடுக்க ஆரம்பித்தார்.

இதுவரையில் நாம் பயன்படுத்தி விட்டு கீழே போடும் பனங்கொட்டை, தென்னை பட்டை, சிறிய அளவிலான சந்தனக்கட்டை, தேக்கு, ரோஸ்மரம், படாக், மூங்கில் மற்றும் பென்சில், நகம் போன்றவற்றை கொண்டு மிகவும் தத்ரூபமாக பல சிற்பங்களை வடிவமைத்துள்ளார்.

தென்னை மட்டையைக் கொண்டு சிறிய அளவிலான குடிலும், பனங்கொட்டையை கொண்டு தம்புரா, கிடார் போன்ற இசைக்கருவிகளையும், ஈச்சமரக் கொட்டையிலிருந்து டீ கோப்பை மற்றும் வண்டு, தேள் போன்ற பூச்சி இனங்களையும் அழகாக வடிவமைத்துள்ளார். மேலும் சிறிய அளவிலான மரத்துண்டுகளை கொண்டு சாவி கொத்து, பேனா, மற்றும் சந்தனமரத்துண்டில் பிள்ளையார், கொய்யா மரத் துண்டில் வீணை, ஆற்றுப்படுக்கைகளில் காணப்படும் கூழாங்கற்களைக் கொண்டும் அழகிய சிற்பங்களை வடிவமைத்துள்ளார்.

கரையான் அரித்த மரத் துண்டுகளை வைத்து அழகான அரண்மனை ஒன்றை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். இதுவரையிலும் யாரும் செய்யாத அளவில் மிக நுட்பமாக 8 மி.மி நீளம், 3 மி.மி. அகலம் கொண்ட செருப்பு, பென்சிலை கொண்டு மிகச்சிறிய தாஜ்மஹால், கடுகளவில் லிங்கம் ஆகியவை இவரது நுணுக்கமான கை வண்ணத்தின் அம்சமாகும்.

அத்தி இலையில் வினாயகர், அரசமரத்து இலை கோகுல கிருஷ்ணன் போன்ற சாமி படங்களையும் அழகாக வடிவமைத்துள்ளார். இவரது இந்த திறமை குறித்து கேட்டபோது,

"எனது அம்மா, அப்பா, மற்றும் நண்பர்கள் கொடுத்த ஊக்கமே இந்த சாதனை புரியகாரணமாக இருந்தது. மேலும் வருங்காலத்தில் யாரும் செய்யமுடியாத அளவில் அழகிய சிற்பங்களை வடிவமைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதே லட்சியம்'' என்கிறார்.

1 Comments:

At Saturday, April 22, 2006 11:09:00 AM, Blogger Esha Tips said...

A very good idea you are having a nice work u r doing........congrulation

 

Post a Comment

<< Home


நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!