நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!

சாதனையாளர்கள்

அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர்களையும், நம் நாட்டில் இளம் சாதனையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்படும். உங்க குழந்தையையும் சாதனை குழந்தையாக சாதிக்க உதவுங்கள்.

Sunday, April 23, 2006

சாதனை 3 - முட்டையில் வித்தை


பொதுவாக வீட்டில் முட்டையை பார்த்தால் என்ன செய்ய தோன்றும். இது என்ன கேள்வி? எடுத்து ஆம்லெட் போட்டு சாப்பிட தோன்றும் என்கிறீர்களா. அதுதான் இல்லை.

சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த பிரதீப்குமாருக்கு வேறு விதமாக தோன்றி இருக்கிறதே. அப்படி முட்டையில் அவர் என்ன வித்தை செய்தார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறதா? அதற்கு முன்பு பிரதீப்குமாரை பற்றி ஒரு சின்ன அறிமுகம்.


23 வயதேயான பிரதீப்குமார் சிந்தாதிரிப் பேட்டையில் சொந்தமாக வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்து இருக்கிறார். அவரது தாயாரின் பெயர் நித்திய கல்யாணி. ஏதாவது புதுமையான சாதனை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற தனியாத ஆர்வம் உடையவர் பிரதீப். எதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம் என்று நினைத்தவருக்கு கைகொடுத்த பொருள்தான் முட்டை.

இந்த முட்டையை வைத்து என்ன சாதனை செய்யலாம் என்று யோசித்தார். முட்டை லேசாக தவறினால் உடைந்து விடும். அப்படிப்பட்ட தன்மை கொண்ட முட்டையில் அதிக துளைகள் போட்டு சாதனை செய்தால் என்ன என்று அவருக்கு தோன்றியது. இதனால் முட்டையில் யாராவது அதிக துளைகள் போட்டு இருக்கிறார்களா? என விசாரித்தார். அப்படி யாரும் செய்ததில்லை என்று அறிந்தவுடன் தனது எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்க தீவிரமாக பாடுபட்டார். இரவு தனது பணி முடிவடைந்தவுடன் தனது சாதனை முயற்சியை தொடங்கி விடுவார். இந்த சாதனை முயற்சியில் ஏராளமான முட்டைகளையும் உடைத்து இருக்கிறார்.

முதலில் முட்டையின் அடிப்பாகத்தை லாவகமாக உடைத்து அதனுள் இருந்து மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை வெளியே எடுத்து விடுகிறார். பின்பு விசேஷமாக வடிவமைக்கப்பட்ட டிரில் பிட் மூலம் சிறு துளைகள் இடுகிறார்.

இவ்வாறு ஒரு முட்டையில் அதிக பட்சமாக சுமார் 11 ஆயிரம் துளைகள் போட்டு இருக்கிறார். இந்த துளைகள் போட 15 மணி நேரம் செலவிட்டாராம். இந்த ஒவ்வொரு துளைகளும் மிக நுட்பமாக 0.2 மில்லி மீட்டரில் போடப்பட்டுள்ளது. இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் முதலில் முட்டையில் அதிக துளைகள் போடவேண்டும். அதே நேரத்தில் முட்டைக்கு மிக அருகில் துளைகள் போடக் கூடாது. மிக அருகருகே துளை போட்டால் முட்டை உடைந்து விடும். எனவே கவனமாக அதிக நெருக்கம் இல்லாமலும் துளைகள் அமைய வேண்டும். இது மிகவும் சவால் நிறைந்த வேலையாக இருந்தது. எனக்கு ஆரம்பத்தில் இந்த சாதனையைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் எனது நண்பர்கள் கொடுத்த ஊக்கம் தூண்டுகோலாக அமைந்தது,'' என்கிறார் பிரதீப்குமார்.

இதே போல் வேறு இரண்டு முட்டைகளில் 0.3 மில்லி மீட்டரில் சுமார் 7 ஆயிரத்து 500 துளைகளும், 0.4 மில்லி மீட்டரில் 4 ஆயிரத்து 730 துளைகள் இட்டு சாதனை படைத்து இருக்கிறார். 100 துளைகள் நிறைவடைந்தவுடன் துளைகளை கணக்கிட குறித்து வைத்து கொள்வாராம். இந்த துளையிட்ட முட்டையை சிறிய சதுர வடிவ கண்ணாடி கூண்டிற்குள் அடைத்து வைத்துள்ளார். முட்டைக்குள் 12 வாட்ஸில் எரியும் சிறிய வண்ண விளக்குகளை பொருத்தியுள்ளார். இது ஒவ்வொன்றாக கண் சிமிட்டி எரிவதால் இருட்டில் முட்டையில் உள்ள துளைகள் பிரகாசமாக தெரிகின்றன. எலக்ரானிக்ஸ் பற்றி ஓரளவு தெரிந்து இருந்ததால் தானாகவே வடிவமைத்ததாக கூறினார். தனது சாதனையை முதலில் லிம்கா புத்தகத்தில் பதிவு செய்ய முயற்சித்து வருகிறார்.

பிரதீப் குமாருக்கு ஓவியம் வரைவதிலும் ஆர்வம் உண்டு. கருப்பு வரைபட அட்டையில் தேச தந்தை காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் உருவங்களை துளைகளாலேயே வரைந்து உள்ளார். இந்த வரைபடத்திற்கு பின்னாலும் வெளிச்சம் கொடுத்து படங்களை பிரகாசமாக மின்னச் செய்து உள்ளார். தான் சார்ந்திருக்கும் வெல்டிங் துறையில் புதிய கருவியை கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளதாகவும் கூறினார் சாதனையாளர் பிரதீப்குமார்.

நன்றி: தினத்தந்தி - இளைஞர் மலர்

0 Comments:

Post a Comment

<< Home


நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!