நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!

சாதனையாளர்கள்

அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர்களையும், நம் நாட்டில் இளம் சாதனையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்படும். உங்க குழந்தையையும் சாதனை குழந்தையாக சாதிக்க உதவுங்கள்.

Thursday, May 04, 2006

சாதனை 5 - 7 மணி நேரத்தில் 65 கி.மீ ஓடிய 4 வயது சிறுவன்

இந்தியாவிலும் ஓர் உலக சாதனை நாயகன்

புவனேஸ்வர்: ஒரிசாவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் புதியா சிங், 65 கி.மீ., தூரம் மாரத்தான் போட்டியில் ஓடி சாதனை படைத்தான். சிறுவனின் சாதனை, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

ஒரிசாவை சேர்ந்த புதியா சிங் பிறந்து நான்கு ஆண்டுகள் எட்டு மாதம் தான் ஆகிறது. இந்த வயதில் அத்தனை எளிதில் பிறர் யாரும் செய்யாத சாதனையை செய்து ஒட்டு மொத்த இந்தியாவையும் தன் பக்கம் திருப்பியுள்ளான் இந்த சாதனைச் சிறுவன்.

மாரத்தான் போட்டியில் ஓடி சாதனை படைக்க வேண்டும் என்பது சிறுவனின் நீண்ட நாள் ஆசை. இந்த ஆசையை செயல்படுத்த நேற்று புதியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரிசாவின் புனித நகரான பூரியில் உள்ள புகழ் பெற்ற ஜெகநாதர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் நேற்று காலை தனது சாதனை ஓட்டத்தை துவங்கினான். சிறுவனின் பயிற்சியாளர் பிராஞ்சி தாஸ், மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேர் உடன் ஓடி வந்தனர். ஓட்டப் பந்தய வழி முழுவதும் சாலையில் ஓரங்களில் திரண்டிருந்த மக்கள் புதியாவை கைதட்டி உற்சாகப்படுத்தி, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். ஏழு மணி இரண்டு நிமிடங்களில் 65 கி.மீ., தூரத்தை கடந்து புவனேஸ்வர் நகருக்குள் நுழைந்த புதியா தனது ஓட்டத்தை நிறைவு செய்தான்.

பின்னர் சாதனைச் சிறுவனை கவுரவிக்கும் வகையில் புவனேஸ்வரில் பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவில், லிம்கா சாதனைப் புத்தகத்தின் உதவி ஆசிரியர் அம்ரீன் தூர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது," பூரியிலிருந்து புவனேஸ்வர் வரை புதியாவின் ஓட்டத்தை கவனமாக கண்காணித்தோம். இத்தனை சிறிய வயதில் வேறு யாரும் இது போன்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க முடியாது. இது மிகச் சிறந்த சாதனை மட்டுமல்ல அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு விஷயம்.

புதியாவின் பிறந்தது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் அவன் செய்த சாதனைகள் வரை அனைத்தும் முன்னிலைப்படுத்தப்படும். சிறுவனின் சாதனை மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்கும். புதியாவின் சாதனை குறித்த விவரங்கள் லிம்கா ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும். வரும் 2007ம் ஆண்டிற்கான லிம்கா புத்தகத்தில் சிறுவனின் சாதனை இடம் பெறும்,' என்றார்.

பாராட்டு விழாவில் ஒரிசா விளையாட்டு துறை அமைச்சர் டெபாசிஸ் நாயக், காங்கிரஸ் கட்சி எம்.பி., அர்ச்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதியாவின் தாயார் சுகந்தி சிங் தனது மகனின் சாதனை குறித்து," புதியாவால் ஒரிசாவிற்கும், இந்தியாவிற்கும் பெருமை கிடைத்துள்ளது. எனது மகனின் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்,' என பெருமிதத்துடன் கூறினார்.

நன்றி: தினமலர் - 03-05-06

2 Comments:

At Thursday, May 04, 2006 10:11:00 AM, Blogger Muthu said...

பரஞ்சோதி,

சின்ன வயசில சாதனைதான்.ஆனால் எலும்புகள் முழு வளர்ச்சி பெறாத நிலையில் இதுபோல் கடுமையாக ஓடுவது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.

இச்சிறுவனை நாம் பாதுகாக்கவேண்டும்.

 
At Thursday, May 04, 2006 1:44:00 PM, Blogger பரஞ்சோதி said...

முத்து மிகச்சரியாக சொன்னீங்க.

நான் இச்சாதனையை தொலைக்காட்சியில் பார்த்ததுமே, அக்குழந்தையின் உடல்வலியை நினைத்து பார்த்தேன். பாவம் சிறுவன், சாதனை பாராட்டப்பட வேண்டியது தான் என்றாலும், அக்குழந்தையின் எதிர்கால உடல் நலத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. இதற்கு மேலும் அதிக தூரம் என்ற சாதனை படைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதே போல் தொலைக்காட்சியில் கூட சின்னஞ்சிறு குழந்தைகள் பல நாடுகள், கொடிகள், இப்படி பல தகவல்களை அர்த்தம் புரியாமலும், விபரம் தெரியாமலும் ஞாபக சக்தியை வைத்து மட்டுமே சொல்வதை பார்த்தாலும் பரிதாபமாக இருக்கும்.

பிஞ்சு குழந்தைகளின் தலை மேல் இத்தனை பாரமா? பாவமில்லையா, பெற்றோர் கட்டாயம் இதை நினைத்து பார்க்க வேண்டும். நான் என் மகளை 5 வயது வரை அவரது இஷ்டம் போல் விளையாட அனுமதிப்பேன், பின்னர் அவர் விருப்பம் போல் ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அதில் சிறப்பாக வர உதவுவேன்.

 

Post a Comment

<< Home


நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!