சாதனை 6 – இரு கால்கள் இல்லாமல் எவரெஸ்ட் சிகரம் தொட்டவர்
இரண்டு கால்களையும் இழந்த நியூசிலாந்து மலையேறும் வீரர் ஒருவர் செயற்கை கால்கள் உதவியுடன் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி புதிய சாதனை படைத்துள்ளார்.
உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இமயமலையில் எவரெஸ்ட் சிகரம் , கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரத்து 850 மீட்டர் ( 29 ஆயிரத்து 35 அடி) உயரமுடையது.
எவரெஸ்ட் சிகரத்தின் மீது முதல் முதலாக ஏறி சாதனை படைத்தவர் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங். இவர்கள் இந்த சாதனையை 1953ம் ஆண்டு நிகழ்த்தினர்.
அதே நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் மார்க் இங்லீஸ். வயது 47. இவரும் மலையேறும் வீரரே. கடந்த 1982ம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கூக் என்ற சிகரம் மீது மார்க் இங்லீசும், அவரது நண்பரும் ஏறிக் கொண்டிருந்தனர்.
அப்போது தட்பவெப்பநிலை மாறி மார்க் இங்லீஸ் இருந்த பகுதி பனியால் உறைந்து விட்டது. இங்லீசும், அவரது நண்பரும் 14 நாட்கள் அந்த மலையில் இருந்த ஒரு குகையில் அடைந்து இருந்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டாலும், அந்த விபத்தில் இங்லீசின் இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழே துண்டாகி விட்டன.
மலையேறும் வீரர் ஒருவருக்கு கால்கள் தான் முக்கியமானது. அதையே இழந்தாலும் இங்லீஸ் மனம் தளரவில்லை. செயற்கை கால்களை பொருத்தி மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.
தனது வாழ்நாள் சாதனையாக உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் மீது ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்று இங்லீஸ் திட்டமிட்டார். இதன்படி கடந்த 40 நாட்களுக்கு முன் அந்த சாதனை முயற்சியை இங்லீஸ் மேற்கொண்டார்.
இரண்டு கால்களையும் இழந்த ஒருவர் நடக்க நினைப்பதே அரிதான ஒன்று. செயற்கை கால்களுடன் மலை மீது ஏறுவது என்பது சாதாரண விஷயமில்லை. எவரெஸ்ட் மீது ஏறிக் கொண்டு இருந்த போது 6 ஆயிரத்து 400 மீட்டர் உயரத்தில் இங்லீசுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அவர் அணிந்து இருந்த இரண்டு செயற்கை கால்களில் ஒன்று சேதமடைந்தது. இருப்பினும், கைவசம் தயாராக கொண்டு சென்று இருந்த மாற்று செயற்கை காலை பொருத்தி கொண்டு இங்லீஸ் தொடர்ந்து சிகரம் மீது ஏறினார்.
நேற்று முன்தினம் இரவு எவரெஸ்ட் உச்சியை தொட்ட இங்லீஸ் புதிய சாதனையை புரிந்து விட்டார். இரண்டு செயற்கை கால்களின் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஒருவர் அடைந்தது இதுவே முதல் முறை. உடன் அங்கிருந்தபடியே நியூசிலாந்தில் உள்ள தனது மனைவியுடன் இங்லீஸ் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
புதிய சாதனை புரிந்த மார்க் இங்லீசுக்கு நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாமும் அவரை பாராட்டுவோம், கொண்ட காரியத்தில் சுணக்கம் இல்லாமல் முன்னேறுவோம்.
நன்றி: தினமலர், யாகூ
0 Comments:
Post a Comment
<< Home