நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!

சாதனையாளர்கள்

அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர்களையும், நம் நாட்டில் இளம் சாதனையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்படும். உங்க குழந்தையையும் சாதனை குழந்தையாக சாதிக்க உதவுங்கள்.

Wednesday, May 17, 2006

சாதனை 6 – இரு கால்கள் இல்லாமல் எவரெஸ்ட் சிகரம் தொட்டவர்


இரண்டு கால்களையும் இழந்த நியூசிலாந்து மலையேறும் வீரர் ஒருவர் செயற்கை கால்கள் உதவியுடன் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி புதிய சாதனை படைத்துள்ளார்.

உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இமயமலையில் எவரெஸ்ட் சிகரம் , கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரத்து 850 மீட்டர் ( 29 ஆயிரத்து 35 அடி) உயரமுடையது.

எவரெஸ்ட் சிகரத்தின் மீது முதல் முதலாக ஏறி சாதனை படைத்தவர் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங். இவர்கள் இந்த சாதனையை 1953ம் ஆண்டு நிகழ்த்தினர்.

அதே நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் மார்க் இங்லீஸ். வயது 47. இவரும் மலையேறும் வீரரே. கடந்த 1982ம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கூக் என்ற சிகரம் மீது மார்க் இங்லீசும், அவரது நண்பரும் ஏறிக் கொண்டிருந்தனர்.

அப்போது தட்பவெப்பநிலை மாறி மார்க் இங்லீஸ் இருந்த பகுதி பனியால் உறைந்து விட்டது. இங்லீசும், அவரது நண்பரும் 14 நாட்கள் அந்த மலையில் இருந்த ஒரு குகையில் அடைந்து இருந்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டாலும், அந்த விபத்தில் இங்லீசின் இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழே துண்டாகி விட்டன.

மலையேறும் வீரர் ஒருவருக்கு கால்கள் தான் முக்கியமானது. அதையே இழந்தாலும் இங்லீஸ் மனம் தளரவில்லை. செயற்கை கால்களை பொருத்தி மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.

தனது வாழ்நாள் சாதனையாக உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் மீது ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்று இங்லீஸ் திட்டமிட்டார். இதன்படி கடந்த 40 நாட்களுக்கு முன் அந்த சாதனை முயற்சியை இங்லீஸ் மேற்கொண்டார்.

இரண்டு கால்களையும் இழந்த ஒருவர் நடக்க நினைப்பதே அரிதான ஒன்று. செயற்கை கால்களுடன் மலை மீது ஏறுவது என்பது சாதாரண விஷயமில்லை. எவரெஸ்ட் மீது ஏறிக் கொண்டு இருந்த போது 6 ஆயிரத்து 400 மீட்டர் உயரத்தில் இங்லீசுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அவர் அணிந்து இருந்த இரண்டு செயற்கை கால்களில் ஒன்று சேதமடைந்தது. இருப்பினும், கைவசம் தயாராக கொண்டு சென்று இருந்த மாற்று செயற்கை காலை பொருத்தி கொண்டு இங்லீஸ் தொடர்ந்து சிகரம் மீது ஏறினார்.

நேற்று முன்தினம் இரவு எவரெஸ்ட் உச்சியை தொட்ட இங்லீஸ் புதிய சாதனையை புரிந்து விட்டார். இரண்டு செயற்கை கால்களின் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஒருவர் அடைந்தது இதுவே முதல் முறை. உடன் அங்கிருந்தபடியே நியூசிலாந்தில் உள்ள தனது மனைவியுடன் இங்லீஸ் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

புதிய சாதனை புரிந்த மார்க் இங்லீசுக்கு நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாமும் அவரை பாராட்டுவோம், கொண்ட காரியத்தில் சுணக்கம் இல்லாமல் முன்னேறுவோம்.

நன்றி: தினமலர், யாகூ

Thursday, May 04, 2006

சாதனை 5 - 7 மணி நேரத்தில் 65 கி.மீ ஓடிய 4 வயது சிறுவன்

இந்தியாவிலும் ஓர் உலக சாதனை நாயகன்

புவனேஸ்வர்: ஒரிசாவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் புதியா சிங், 65 கி.மீ., தூரம் மாரத்தான் போட்டியில் ஓடி சாதனை படைத்தான். சிறுவனின் சாதனை, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

ஒரிசாவை சேர்ந்த புதியா சிங் பிறந்து நான்கு ஆண்டுகள் எட்டு மாதம் தான் ஆகிறது. இந்த வயதில் அத்தனை எளிதில் பிறர் யாரும் செய்யாத சாதனையை செய்து ஒட்டு மொத்த இந்தியாவையும் தன் பக்கம் திருப்பியுள்ளான் இந்த சாதனைச் சிறுவன்.

மாரத்தான் போட்டியில் ஓடி சாதனை படைக்க வேண்டும் என்பது சிறுவனின் நீண்ட நாள் ஆசை. இந்த ஆசையை செயல்படுத்த நேற்று புதியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரிசாவின் புனித நகரான பூரியில் உள்ள புகழ் பெற்ற ஜெகநாதர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் நேற்று காலை தனது சாதனை ஓட்டத்தை துவங்கினான். சிறுவனின் பயிற்சியாளர் பிராஞ்சி தாஸ், மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேர் உடன் ஓடி வந்தனர். ஓட்டப் பந்தய வழி முழுவதும் சாலையில் ஓரங்களில் திரண்டிருந்த மக்கள் புதியாவை கைதட்டி உற்சாகப்படுத்தி, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். ஏழு மணி இரண்டு நிமிடங்களில் 65 கி.மீ., தூரத்தை கடந்து புவனேஸ்வர் நகருக்குள் நுழைந்த புதியா தனது ஓட்டத்தை நிறைவு செய்தான்.

பின்னர் சாதனைச் சிறுவனை கவுரவிக்கும் வகையில் புவனேஸ்வரில் பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவில், லிம்கா சாதனைப் புத்தகத்தின் உதவி ஆசிரியர் அம்ரீன் தூர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது," பூரியிலிருந்து புவனேஸ்வர் வரை புதியாவின் ஓட்டத்தை கவனமாக கண்காணித்தோம். இத்தனை சிறிய வயதில் வேறு யாரும் இது போன்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க முடியாது. இது மிகச் சிறந்த சாதனை மட்டுமல்ல அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு விஷயம்.

புதியாவின் பிறந்தது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் அவன் செய்த சாதனைகள் வரை அனைத்தும் முன்னிலைப்படுத்தப்படும். சிறுவனின் சாதனை மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்கும். புதியாவின் சாதனை குறித்த விவரங்கள் லிம்கா ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும். வரும் 2007ம் ஆண்டிற்கான லிம்கா புத்தகத்தில் சிறுவனின் சாதனை இடம் பெறும்,' என்றார்.

பாராட்டு விழாவில் ஒரிசா விளையாட்டு துறை அமைச்சர் டெபாசிஸ் நாயக், காங்கிரஸ் கட்சி எம்.பி., அர்ச்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதியாவின் தாயார் சுகந்தி சிங் தனது மகனின் சாதனை குறித்து," புதியாவால் ஒரிசாவிற்கும், இந்தியாவிற்கும் பெருமை கிடைத்துள்ளது. எனது மகனின் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்,' என பெருமிதத்துடன் கூறினார்.

நன்றி: தினமலர் - 03-05-06

Wednesday, May 03, 2006

சாதனை 4 - கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர். ஆம் அந்த பொன்மொழிக்கு ஏற்ப மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிறுவன் கலக்கி கொண்டு இருக்கிறான். அதுவும் காளையை அடக்கும் போட்டியில். இந்த காளையை அடக்கும் போட்டியை சில நாடுகளில் வீரவிளையாட்டாக கருதுகிறார்கள். ஒரு நாட்டில் அந்த விளையாட்டை தேசிய விளையாட்டாக வைத்துள்ளனர். நமது நாட்டில் கூட அதுவும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளையை அடக்கும் போட்டியை நடத்தி பரிசும் வழங்குகிறார்கள்.

மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் ரபியல் மிரபல் மார்டினெக்ஸ். இவரது மகன்தான் ரபிட்டா மிரபல். இவனுக்கு தற்போது 15 வயது தான் ஆகிறது. ஆனால் இந்த வயதில் காளைகளை அடக்கும் ஏராளமான போட்டியில் கலந்து கொண்டு வெற்றிவாகைசூடியுள்ளான். மொத்தத்தில் அவனது சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

9 வயதில் கலந்து கொள்ள ஆரம்பித்த இவன், இன்று வரை அலாதி பிரியத்துடன் காளை அடக்கும் போட்டியில் கலந்து கொள்கிறான். அதற்கு பாதுகாப்பு கவசமாக அவன் வைத்துக் கொள்வது சிவப்பு நிறத் தொப்பியும்,ஒரு இரும்பு கேடயமும் ஆகும்.

இது வரையிலும் சுமார் இரண்டு டஜன் அதாவது 24 போட்டிகளில் கலந்திருக்கிறான். சமீபத்தில் ஏப்ரல் 16 ந்தேதி மெக்சிகோ அருகில் உள்ள டெக்ஸ்கோகோவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டான். அந்த போட்டியில் உயிரை பணயம் வைத்து வெற்றி பெற்றான். இந்த மாதிரியான போட்டியில் சிறியவர்களும், பெரியவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனாலும் இந்த சின்ன வயதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது கடினமான ஒன்றாகும். இந்த காளையை அடக்கும் போட்டியில் பல தடவை உயிரை காப்பாற்றி வெற்றி பெற்றிருக்கிறான்.

நன்றி: தினத்தந்தி


நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!